தூக்கப் பசி…

•செப்ரெம்பர் 13, 2009 • 1 பின்னூட்டம்

நிம்மதியாய் தூங்கி நெடுநாளாச்சே …mosquito
நொடிப்பொழுது கூட நெடுந்தொலைவாச்சே ..

விடியும் வர விழிச்சிருந்தும் ,
வலைக்குள்ளே சிறையிருந்தும் …

கடிச் சாபம் நீங்கலையே,
அடிச்சச்சடிச்சு மாளளையே…

கொசுவர்த்தி வாங்கியே
கோடி ரூபா தீர்ந்திடுச்சு …

கொசுத் தொல்லை தீரலயே
தூக்கப் பசி மாறலையே .. 😦

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

Advertisements

சின்ன வீடு …

•செப்ரெம்பர் 13, 2009 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

hut

 

சனிக்கிழமை காலை பத்து மணி. தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் செழியனின் தாத்தா. தான் ஃப்யுன்-ஆக பணியாற்றிய பள்ளியில்  ஓய்வு பெற்றதில் இருந்து அவர் அவ்வீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரன் போல இருந்தார். காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது, வீட்டுத்தோட்டத்தைப் பராமரிப்பது, சலவை செய்யத் துணி கொடுப்பது- எடுப்பது என ஆல்-ன்-ஆல் அழகுராஜாவாகத் திகழ்ந்தார். தன் மகனுக்காகத் தானே செய்கின்றோம் என இயல்பாகவே காணப்பட்டாலும், அவரது உள்மனதில் தன் மகன் தன்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லையே எனும் எண்ணம் இருந்தது.

” என்னங்க, நேத்து சாயந்தரம் நான் ஆபீஸ்ல இருந்து வர்ற அப்போ நம்ம வீட்டு ஓனர் என்கிட்ட பேசினார். கேட் மேல ஏறி பையன் விளையாண்டுட்டு இருந்தானாமா, அப்போ சுவர்ல கேட் மோதினா சுவரும் உடையும், கேட்-ம் ‘ஸஃபாயில்’ ஆகிடும், பார்த்துகோங்க-னு சொன்னாரு. கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரு பையனை வச்சு இருக்கோம். அவன் சுதந்திரமாத் திரிய முடியாம என்ன ஒரு வீடு. சீக்கிரம் ‘என்ச்நீர்’ கிட்ட சொல்லி ‘கன்ஸ்டிரக்சன் வொர்க்’-ஐ முடிக்கச் சொல்லணும் – செழியனின் அம்மா அவனுடைய அப்பாவிடம் கூறினாள்.

இதைக்கேட்ட செழியனின் தந்தை அருள், ‘என்ச்நீர்’ கொடுத்து இருந்த கட்டிட மாதிரி பொம்மை-ஐ எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். அதைப்பற்றி தன் மனைவியிடம் விவாதம் செய்து கொண்டு இருக்கையில், அவனருகே ஓடி வந்த செழியன் அம்மாதிரிக் கட்டிட பொம்மை-ஐப் பார்த்தான். ஆறு வயதே ஆகும் செழியன் மிகவும் புத்திசாலி. அம்மாதிரிக் கட்டிட பொம்மை-ஐப் பற்றி அறிந்து கொள்வதில், குழந்தைக்கே உரிய ஒரு ஆர்வம் அவனது கண்களில் தெரிந்தது.

மிகவும் சுலபமான கேள்விகளை அவனது தந்தையிடம் கேட்க தொடங்கினான்.

” அப்பா அது என்ன, இது ஏன் இங்க இருக்கு ? “

“ஓ! அதுவா … என் குட்டி பையன் குளிக்க, குடிக்க தண்ணீர் வேண்டாமா ? அதுக்குத்தான் – ‘வாட்டர் டாங்க்’ 🙂 “

” என்ன  ‘ கலர் ‘ லப்பா இருக்கும் ? “…


தொடர்ந்தது உரையாடல். அப்போது அம்மதிரியில் ஒரு ஓரமாக அமையப்பெற்றிருந்த சிறு குடில் போன்ற அமைப்பைக் காட்டி செழியன் கேட்டான்…

” அப்பா இது என்ன – சிறுசா இருக்கு ? “

ஒரு சிறு அமைதி நிலவியது … அப்பாவிடம் பதில் இல்லை…

அருள் பதில் கூறாமல், தன் மனைவியை நோக்கினான். ..

“ஓ! அதுவாடா கண்ணா!  உன் வயசான தாத்தா, படியெல்லாம் ஏறி இவ்ளோ பெரிய வீட்டுக்குள்ள வர முடியாது இல்ல …அதான் உன் தாத்தா இருக்க! ” …

“எவ்வளவோ மருமகள்கள் தன் மாமனாரை முதியோர் இல்லத்தில் இருக்க வைக்க, இவள் தான் கட்டும் வீட்டில் தன் அப்பாவிற்கு ஒரு சிறு குடிலாவது போட ஒத்துகிறாளே! அது வரை மகிழ்ச்சி..” நினைத்தான் அருள்.

மீண்டும் அமைதி .. செழியன் எழுந்து வெளியே சென்றான்.

” தாத்தா, தாத்தா.. உன்னால படி ஏறி வர முடியாதா ? அதான் உனக்கு தனியா  ஒரு சின்ன வீடா ? ” ..
..

கண்ணில் வந்த நீரை தன் பேரனிடம் மறைத்து, ” ஆமாடா தங்கம்.. ! சரி வா நாம மிட்டாய் வாங்க போலாம் …. “..

நேரம் கடந்தது .. மதியம் மணி ஒன்று….

அருள் அன்றைய தின செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு  இருந்தான்.  அவனருகே செழியன் விளையாண்டு கொண்டு இருந்தான்…

“என்னங்க, சாப்பிட வாங்க… செழி குட்டி நீயும் வா ..” கூறிக்கொண்டே அவர்களருகே வந்தாள் செழியனின் தாய் .
..
” செழி குட்டி .. என்ன பண்ணுற ? ” அருகே அமர்ந்து பார்த்தாள்…

child play

” வீடு கட்டி விளையாடுறேன் மா .. இங்க  பார்த்தாயா, நான் பெரியவன் ஆகி கட்ட போற வீட்டில் கூட உனக்கும் அப்பாக்கும் ஒரு சின்ன வீடு தனியா வச்சு இருக்கேன் ..”அமைதி .. மயான அமைதி .. ஆனால் செழியனின் தாய் மனதில் ஒரு புயல் .. அருளின் கண்களில் குழப்பம்… பதில் பேசாமல் விறு விறு என எழுந்து சென்றாள் செழியனின் தாய் …தொலைபேசியின் அருகில்..
….

” ‘ஹலோ என்ச்நீர் சார் ‘ .. வணக்கம் … நான் மஞ்சு பேசுறேன் .. எங்க வீட்டு ‘கன்ஷ்டிரக்சன் வொர்க்-இல’ ஒரு மாற்றம் இருக்கு. அந்த சின்ன வீடு வேண்டாம் … இதைப்பத்தி பேசணும்.. வீட்டுக்கு வர முடியுமா ? …. ”

தன் மகனைத்  தாவி அனைத்துக்கொண்டான் அருள் ….

வெளியே அமர்ந்து இதைக்கவனித்துக் கொண்டிருந்த செழியனின் தாத்தா அவரது கண்ணீரை  துடைக்கும் வேளையில், மஞ்சுவின் கை அவரது பாதம் தொடுவதை அவர் உணராமலில்லை…. 🙂

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad

சக உதிரமே …

•செப்ரெம்பர் 12, 2009 • 1 பின்னூட்டம்

ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
   ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன்  கண்டு மகிழ்ந்தே – நிறை
   மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

உலக நாகரீகம் தொட்டிலில் இருந்தது முதல் , அதனுடைய மேற்படிப்பு காலம் வரை, அதனுடைய தாய்ப்பாலில் தொடங்கி தாலாட்டில் தொடர்ந்து இன்று வரை ஒரு முக்கியமான பங்களிப்பு என் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு உண்டு.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன்தோன்றிய மூத்த குடி” என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. தமிழையும், மனிதனின் மூச்சையும் நன்கு அறிந்தவர்கள் “அம்மா” எனும் சொல்லே ஒரு மூச்சுப்பயிற்சி என்கின்றனர்.

“எம்மொழி தமிழுக்கு இல்லாப்பெருமை எம்மொழிக்குண்டு?”  வரலாற்றைச்சற்றே புரட்டினால் ஆயிரம் ஆயிரம் காலமாய் என் தாய்மொழிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்,அதனை அழித்துவிட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் காணலாம். 

 உலக மயமாதலும், நாகரீக வளர்ச்சியும், ஆடம்பர மோகமும், இன்னும் ஆயிரம் காரணங்களும் நம் முகவரியான தமிழை சற்றே தொய்வடைய செய்தது போன்ற தோற்றத்தை நீக்குவது என் கடமை, உன் கடமை, தமிழரான நம் கடமை.  இந்த எண்ணமே எனக்கு இவ்விணையத்தை உருவாக்க அடிப்படியான காரணம்.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
   பரவும்வகை செய்தல் வேண்டும்…

பல லட்சம் வலைப்பக்கங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டைக் கொண்டுள்ளது.  வாழ்வின் ஆரோக்யமான நிகழ்வுகள், நல்ல புத்தகங்கள், சிறந்த மனிதர்கள், சில கவிதைகள், சில சிறுகதைகள் என, என் சில தமிழ் சகோதரர்களையாவது மகிழ்விக்கும் எண்ணத்தோடே இந்த வலைப்பக்கத்தைத் தொடங்குகிறேன்.

உங்களது  மேலான கருத்துக்களை என்னோடு இந்த வலைப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப் பாடுபட்டார்கள் நம் முன்னோர். இணையத்தில் தமிழ் வளர்ப்போம் நாம்.

____________________________________________________________________________________________

சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..

signature - letter pad